
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் – சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்
சென்னை, செப். 16:
இலங்கை கடற்பரையினரால் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் நேற்று விடுதலையாகி, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் அருகிலுள்ள கடலோர பகுதிகளைச் சேர்ந்த 20 மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது, அவர்கள் கட்டுப்பாட்டு கோட்டையை மீறியதாகக் கூறி இலங்கை கடற்பரையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இலங்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர்.மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையான மீனவர்கள் நேற்று மதியம் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அங்கு மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீருடன் வரவேற்றனர்.பிடிபட்ட ஒவ்வொரு மீனவரிடமும் தலா 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படுவதாகவும், தினக்கூலி அடிப்படையில் வாழும் எங்கள் போன்ற ஏழை மீனவர்கள் இத்தனை பெரிய தொகையை எப்படிக் கட்டுவது என்ற கவலை நாளும் வாட்டி வருகிறது என அவர்கள் கூறினர்.
மேலும், “பிடிபட்ட படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்கும் என அறிவித்தாலும், அந்த உதவித்தொகை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது. எங்கள் வாழ்வாதாரம் படகுகளே என்பதால், அந்த நிவாரணத் தொகை விரைவாக எங்களுக்கு கிடைத்தால் மட்டுமே மீண்டும் கடலில் இறங்கி வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்,” எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கான அபராதத் தொகையை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், மீனவர்களின் குடும்பங்கள் மீள, பிடிபட்ட படகுகளுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
செய்தியாளர் P.சபரிராஜா






