
ஆறடி உயரத்தில் முருங்கைகாய்கள் - அதிசயத்துடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள் :
கம்பம். செப். 13-
தேனி மாவட்டம் கம்பத்தில் சிறப்பு எஸ்ஐ ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் உள்ளம் முருங்கை மரத்தில் சுமார் 6 அடி அளவில் முருங்கைக்காய்கள் கொத்துக்கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. இதய வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் – சுருளிப்பட்டி ரோட்டில் வீட்டை ஒட்டி விவசாய நிலம் வைத்திருப்பவர் கண்ணதாசன். காவல்துறையில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றும் இவர், விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர்.
ரசாயன மருந்து தெளிக்காத கத்திரிக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளும், அத்தி மரங்களும், முருங்கை மரங்களும் வளர்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு சுருளிப்பட்டியை சேர்ந்த நண்பர் ஒருவர் புட்டு முருங்கையின் நான்கு குச்சிகளை கொடுத்துள்ளார்.
அதை கண்ணதாசன் தனது தோட்டத்தில் நட்டு வைத்ததில் ஒன்று மட்டுமே மரமாக முளைத்து வந்துள்ளது.
சிறிது நாட்களிலேயே அதில் முருங்கைக்காய் காய்க்க தொடங்கியது. சாதாரண முருங்கைக்காய் போல் ஆரம்பத்தில் காய்க்கத் தொடங்கிய இந்த காய்கள், நாளடைவில் நீட்டமாக வளர தொடங்கின.
இதைப் பார்த்தவர் காய்களை தொடக்கத்தில் பறிக்காமல் விட்டார். இதனால் முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் ஐந்து முதல் ஆறு அடிக்கு மேல் நீளத்திற்கு நீட்டமாக வளர்ந்து உள்ளது.
இதில் சில காய்கள் மரத்திலிருந்து சாட்டை போல் தொங்கி, தரையில் முட்டி மீண்டும் மேல்நோக்கி சுருண்டு வளர்ந்து வருகிறது.
இந்த முருங்கைக் காய்களை தினமும்பறித்து அவரது தாயார், அவர்களது கடையில் காட்சி பொருள்போல் தொங்க விட்டுள்ளனர்.
இதை கம்பம் – சொல்லிப்பட்டி ரோட்டில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து விசாரித்து வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து எஸ் ஐ கண்ணதாசனிடம் கேட்டபோது, இயற்கை விவசாயத்தில் எனக்கு ஆர்வம், இதுபோல் நண்பர் ஒருவர் கொடுத்த முருங்கைக் குச்சியை சாதாரணமாகத்தான் கொண்டு வந்து வைத்தேன், இயற்கையாகவே வளர்ந்தது, ஆனால் இது எந்த வகை என்பது எனக்குத் தெரியாது, இப்பொழுது தான் ஆறடி உயரத்தில் நானே முருங்கைக்காய் பார்த்துள்ளேன், நீளமான முருங்கைக்காய்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர், என்றார்.
இந்த அதிசய முருங்கைக்காய் குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப்பூ உணவாகப் பயன்படுகிறது.
மரவகையைச் சேர்ந்த இது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை உள்ளிட்டவை இருக்கு.
மூலனூர் முருங்கை காய் 50 செ.மீ நீளமும், வலையபட்டி முருங்கை 65 செ.மீ நீளமும், சாவகச்சேரி முருங்கை ( இலங்கை ) 120 செ.மீ நீளமும், யாழ்ப்பாண முருங்கை 90 செ.மீ நீளமும், பாலமேடு முருங்கை 60 செ.மீ நீளமும் வளரக்கூடியது. தற்போது தேனி மாவட்டத்தில்
PKM 1 = ( செடி முருங்கை ) 75 செ.மீ நீளமும், PKM -2 ( செடி முருங்கை) 126 செ.மீ நீளமும் வளரக்கூடியது உள்ளது.
நாட்டு முருங்கைக்காய் இந்த அளவு நீளத்துக்கு வராது. தேனி மாவட்டத்தில் பிகேஎம் 1, பிகேஎம் 2 ரகம் தான் கொஞ்சம் நீளமான காய். மூணு அடி, நாலடி வர்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு.
அதனால் இது ஒட்டு முருங்கையாகத்தான் இருக்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் பகுதியில் ஒரு விவசாயி யாழ்பாண முருங்கைன்னு ஒட்டு முருங்கை பயிர் செய்து 5 அடி நீள முருங்கைக்காய் எடுத்தார்.
ஆனால் இது சுமார் 6 அடி இருப்பதால் இது என்ன ரகம், என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்றார்.






