
முற்பாண்டியர் கால பிரம்ம சாஸ்தா சிற்பம் கண்டுபிடிப்பு:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விராதனூர் கிராமத்தில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் தென்னகப் பண்பாட்டு ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்களும், லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் மற்றும் நாசியா கல்லூரி உதவிப் பேராசிரியர்களான கோபி, மாரீஸ்வரன் போன்றவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் முருகப்பெருமானின் வடிவங்களில் ஒன்றான பிரம்ம சாஸ்தா சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இச்சிற்பத்தைப் பற்றி அவர்கள் கூறியதாவது , பிரம்மசாஸ்தா சிற்பம்: கந்தபுராணத்தின்படி பிரம்ம சாஸ்தா வடிவமானது “பிரம்ம சாத்தன்” என்று அறியப்படுகிறது பிரம்மன் பிரணவப் பொருளை மறந்த காரணத்தால் முருகப்பெருமான் பிரம்மனை சிறைப்பிடித்து அவரின் படைப்பு தொழிலை மேற்கொண்டதால் “பிரம்மசாஸ்தா” என்ற வடிவத்தை எடுத்தார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
அத்தகைய சிறப்பினை உடைய பிரம்ம சாஸ்தா சிற்பத்தின் உயரம் 3 அடியும் 2 அடி அகலமும் கொண்ட பாறையில் புடைப்புப் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் மேற்பகுதியான தலையில் கூம்பு வடிவ “கரண்ட மகுடம்” காணப்படுகிறது.
முகமானது நன்கு தேய்ந்த நிலையிலும், நீண்ட காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலங்களும் இடம்பெற்றுள்ளன. கழுத்தில் பட்டையான ஆபரணமும், மார்பில் முப்புரி நூலும், இடைக்கு சற்று மேலே உதரபந்தமும் காணப்படுகிறது.
நான்கு கரங்கள் இடம்பெறுகின்றன அவற்றின் வலது பின் கரத்தில் அக்கமாலையும் (ருத்ராட்ச மாலை), இடது பின் கரத்தில் கமண்டலமும், வலது முன் கரத்தில் அபய முத்திரை காட்டியும், இடது முன் கரத்தை ஊறுகஸ்தமாக வைத்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பத்தில் மேலாடையின்றி கீழாடை மட்டும் இடம்பெற்றுள்ளது. இடது காலினை மடக்கியும் வலது காலினை கீழே தொங்கவிட்டும் சுகாசன கோலத்தில் அமர்ந்தவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்ம சாஸ்தா சிற்ப்பமானது பெரும்பாலும் நின்ற கோலத்திலே இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு காணப்படும் இச்சிற்பமானது அமர்ந்த நிலையில் காணப்படுவது அரிதான ஒன்றாக ஆய்வாளர்களிடையே பார்க்கப்படுகிறது. மேலும் இச்சிற்ப வடிவமைப்பை வைத்து முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம் என்று அவர்கள் கூறினர்.






