
பழனியில் தனியார் உணவகங்களில் வசூல் வேட்டை பழனி நகர்நல அலுவலர் மீது குவியும் புகார்.!
பழனி நகராட்சியில் நகர் நல அலுவலராக மனோஜ் என்பவர் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இதே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
நாள்தோறும் இரவு நேரத்தில் தனியார் வாகனம் மற்றும் ஐந்து துப்புரவு பணியாளர்களுடன் தனியார் உணவகங்கள், டீக்கடை கடை, வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்களுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
குப்பை எடுக்க செல்லும் இடங்களில் நகர்நல அலுவலர் , மேஸ்திரி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதன்படி வசூல் செய்யும் தொகையானது பழனி நகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படாமல் முறைகேடு செய்து வருவதாக தெரியவருகிறது. நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் குப்பைகளை அகற்றப்படாமல் அலட்சியம் காட்டும் நகராட்சி அலுவலர்கள், தனியார் கடைகள் வணிக வளாகத்தில் அதிக அக்கறை காட்டுவதும், கட்டாய பணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவித விபரமும் முறையாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடாத நிலையில், அரசு பணியில் உள்ள நகர்நல அலுவலர் நகராட்சி ஊழியர்கள் சிலரை அழைத்துக்கொண்டு நாள்தோறும் குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு பணம் வசூலித்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
மேலும், சுகாதார பணிகளுக்காக மருந்து தெளிக்கும் பணியாளர்களை வைத்து மருந்து தெளிக்கும் பணிகளுக்கு அனுப்பாமல், துப்புரவு பணி செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், வரி வசூல் , கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளவும் நகர்நல அலுவலர் வற்புறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய சூழலில் நகராட்சி , மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு நிதி சம்பந்தமான மோசடிகள் நடந்து வருவதால் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பழனி நகராட்சியில் முறையான அறிவிப்பு இல்லாமல் இரவு நேர கட்டாய வசூலை செய்து வரும் நகர்நல அலுவலர் மனோஜ் , நகராட்சி மேஸ்திரி உட்பட நகராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா.?






