
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட வேண்டும். அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
நாகர்கோவில் செப் 09
கன்னியாகுமரி கடலில் அமைக்கப் பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி கடலில் அமைந்திருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று காண்பதற்கு வசதியாக கண்ணாடி இழைப்பாலம் 37 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்து வருகிறார்கள். இதனால் சர்வதேச அளவிலே கன்னியாகுமரி மேன்மேலும் புகழ்பெற்று வருகிறது. இந்நிலையிலே அந்த கண்ணாடி பாலத்தில் திடிரென்று விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அட்டைகளை வைத்து விரிசல்களை மறைந்துள்ள தாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த அலட்சிய போக்கை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சுற்றுலா பயணிகள் சர்வதேச அளவில் வந்து செல்லக்கூடிய அந்தப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக பராமரித்து விட வேண்டும் என்பது அகில இந்திய தமிழர் கழகத்தின் கோரிக்கையாகும். ஒரே நேரத்தில் பாலத்தில் 750 பேர் பயணிக்கலாம் என்று அமைச்சர் ஏ.வ.வேலு சொல்லியிருந்தார். இதுவரையிலும் கடந்த எட்டு மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தில் நடந்து சென்று அந்த திருவள்ளுவர் சிலையை கண்டு களித்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம் தான், மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரையிலும் சுற்றுலா பயணிகள் யாரும் கண்ணாடி பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை .
அந்த நேரத்தில் பாலத்தின் தரத்தினை ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 962 பேரல்களை கண்ணாடி பாலத்திலே ஏற்றி ஆய்வு நடத்தி இருப்பதாக தெரிகிறது . அந்த ஆய்வு முடிவில் 192.8 டன் தாங்க கூடிய அளவிற்கு தகுதியானதாக கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப் பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை வந்த பின்னர் தான், இப்போது அந்த கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரிசல் ஏற்பட்டதற்கான உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மேலும் இதே போன்று இனி மேலும் கண்ணாடி பாதத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வினை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.






