
கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதனைத் தீர்க்க, புதிய அங்கன்வாடி மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், மையம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தைச் சிலர் எதிர்த்து வருகின்றனர்.
மேலும் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் பல ஆண்டுகளாக சிலர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வருவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த நிலத்தை மீட்டு தங்களது கிராமத்திற்கு தருமாறும் கோரிக்கையுடன், இன்று 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அரசாங்கம் அனுமதி வழங்கியபடி, புதிய அங்கன்வாடி மையம் விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வரும் சிலரை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் நலனுக்கான இடங்கள் தனிநபர்களின் வசம் இருக்கக் கூடாது என்றும் போராட்டத்தில் வலியுறுத்தினர். சம்பவம் காரணமாக கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதற்றநிலை நிலவியது.
இதுகுறித்து கமுதி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மனோகரன் விரைந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.அங்கன்வாடி மையம் அமைக்கும் இடம் தொடர்பான விவகாரத்தில் உரிய விசாரணை செய்து 25. 08.2025 அன்று ஆக்கிரமிப்பு அகற்றி தருவோம் என உறுதி அளித்துள்ளனர். அறிவிப்பில் மறுதேதி கால அவகாசம் வழங்கப்படாது எனவும் உறுதியளித்துள்ளனர்.






