
காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் புதுப்பட்டி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில். திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று விநாயகர் பூஜை, அனுஞ்கை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணஹூகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் புண்ணியாக வாஜனம், இரண்டாம்கால யாக பூஜைகள், திருமுறை பாராயணம், உள்ளிட்டவை நடைபெற்றது. அதன் பின்பாக இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று நாடி சந்தானம், ரக்ஷா பந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று 9 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி பரிவார விமான கலசத்திற்கும் சுப்பிரமணிய சுவாமி மற்றும் காளியம்மன் உள்ளிட்ட விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்வை ஏ. ஆர் கணேச பட்டர் மற்றும் மாணிக்கவாசக குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர்
கும்பாபிஷேக நிகழ்வில் புதுப்பட்டி, கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை மீனாட்சி கருப்பையா, எஸ் கே முத்து சுப்பிரமணி, முத்துக்குமார் சகோதரர்கள், மற்றும் செல்வன், முத்துக்குமார், முத்து சுப்பிரமணியன், கிரிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.