March 2, 2026
எது.. பத்திரிகை சுதந்திரம்..? பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து!

எது.. பத்திரிகை சுதந்திரம்..? பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து!

சுசீந்திரம் மே 02
சர்வதேச பத்திரிகையாளர்களின் தினமாக மே 03 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பாது காக்கப் படுகிறதா என்பதை யோசிக்க கூடிய அளவிற்கு உள்ளது.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது:
ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கும் அரிய செயல் போல், எங்கோ புதைந்திருக்கும் செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து மக்களுக்கு தருவது பத்திரிகைகள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும், வெளிப் படையான மற்றும் பொறுப்புள்ள அரசாங்கத்தை வளர்ப்பதிலும் சுதந்திரமான பத்திரிகை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் அதையடுத்து நான்காவது தூணாக பத்திரிகைத் துறை விளங்குகிறது. அதன் நீட்சியாக பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரம் சமுகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
“ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றிப் பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப் படுத்த வேண்டும்” என்கிறார் காந்திஜி. உண்மைகளை வெளிக் கொண்டு வரப் போராடி, தமது உயிரையே இழந்த கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவை கூறும் விதத்தில் உருவானது தான் ” சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்”.
இந்நாளில் பத்திரிகைச் சுதந்திரத்தின் அடிப்படை கொள்கைகளைக் கொண்டாடுவது, உலகெங்கிலும் உள்ள பத்திரிகைச் சுதந்திரத்தை மதிப்பிடுவது, ஊடகம் மற்றும் பத்திரிகை மீதான தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை அடிப்படை உரிமைகள் என்பதை சர்வதேச சமுகத்திற்கு தெரிவிப்பது, இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறந்த செயல்பாட்டின் மூலம் தங்கள் உயிரையே இழந்த பத்திரரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பன உலகப் பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாட படுவதின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாட்டில் பத்திரிகை சுதந்திர தினம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெயரளவுக்கு பேச பட்டு வருகிறதே தவிர கொண்டாட படுவதில்லை. பத்திரிகை மற்றும் ஊடக அலுவகங்களில் அன்று இறந்து போன, தொழிலில் இன்னுயிர் நீத்தவர்களின் நினைவாக புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாவது நடத்தப் பட வேண்டும். பத்திரிகையாளர் மத்தியில் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.

அரசியல் சார்ந்து பத்திரிகைகள் செயல்படுவது, அவர்களுக்கு ஏற்றால் போல் செய்திகளை தெரிவிப்பது போன்ற எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மிகப் பெரிய சக்தி பத்திரிகை. ஒரு நாட்டின் கட்டமைப்பையே மாற்றக் கூடிய சக்தி பத்திரிகைக்கு உண்டு.

பத்திரிகைச் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யும் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிகைகள் என்பதை நியாபகம் கொள்ள வேண்டும். பொது வெளியில் பத்திரிகை சுதந்திரம் போற்றப் பட வேண்டும். அதற்கு பத்திரிகையாளர்களின் சுதந்திர செயல்பாடு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *