August 9, 2025
மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் தேனியில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் தேனியில் நடைபெற்றது.

தேனி :

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மாடர்ன் மஹாலில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :

தேனி மாவட்டம் கலாச்சாரம் மற்றும் பன்முகத் தன்மை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. குறிப்பாக தோட்டக்கலை மிகவும் சிறப்பாக உள்ளது. தேனி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புரிதலுடன் கலந்து கொள்வது பாராட்டுதலுக்குரியதாகும்.

மிகவும் குறிப்பாக படித்த ஏராளமானோர் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டு
தற்பொழுது விவசாயம் செய்து வருவது மிகந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேனி மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிக அளவு உள்ளது.

மாறுபட்ட காலநிலையை எதிர்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
விவசாயிகள் சவால்களை எதிர்கொள்வதற்கான பல்வேறு கருத்தரங்குகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தென்னை சாகுபடி பரப்பினை அதிகரிக்க செய்து, தென்னையில் பூச்சி, நோய்க்கட்டுப்பாடு, தென்னங்கன்று நடவு முறைகள், ஊடுபயிர்கள் சாகுபடி மற்றும் இலாபகரமான முறையில் மகசூல் அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் பல்வேறு அனுபவங்கள் மற்றும் தீர்வு முறைகள் குறித்து எடுத்துரைத்தும், தென்னை சாகுபடி குறித்த தங்களது சந்தேகங்களுக்கான
தீர்வுகளை தெரிந்து கொள்ள இக்கருத்தரங்கினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தென்னை சாகுபடி குறித்த விவசாயிகளுக்கான விளக்க கையேட்டினை மாவட்டஆட்சித்தலைவர் வெளியிட்டார். இக்கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயி சுந்தர் தெரிவித்ததாவது; என் பெயர் சுந்தர். நான் பெரியகுளம், வடுகபட்டி
பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன்.

தோட்டக்கலைத்துறையின் சார்பில் நடைபெற்ற தென்னை விவசாயம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இக்கருத்தரங்கில் தென்னையில் அதிக மகசூல் பெறுவது, பூச்சி, நோய்க்கட்டுப்பாடு, ஊடுபயிர்கள், சாகுபடி குறித்தும் மற்றும் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னை
வளர்ச்சி வாரிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், தென்னை சாகுபடி குறித்த விளக்க கையேட்டினையும் வழங்கியுள்ளார்கள். இக்கருத்தரங்கு விவசாயிகள் ஆகிய எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்தகைய நிகழ்விற்கு ஏற்பாடு செய்து தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில், இணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, துணை இயக்குநர்கள் நிர்மலா (தோட்டக்கலை), சுரேஷ் (வேளாண்வணிகம்), செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் தென்னை ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *