
கொல்லங்கோடு நகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ள சாலை பணியால் ஏலாக்கரை பகுதி மக்கள் கடும் குமுறல்
கன்னியாகுமரி மாவட்டம் கிளியூர் தொகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியைச் சார்ந்த நித்திரவிளை அருகே உள்ள 30 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏலாக்கரை பாணந்தோப்பு சாலையானது சுமார் 11 ஆண்டுகளுக்கு மேலாக மழை காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நின்று பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது. மேலும் பணந்தோப்பு குளம் மிகவும் பழமையான மழைநீர் சேகரிக்கின்ற குளம் ஆகும். மழைக்காலங்களில் இச்சாலை தாழ்வான பகுதி என்பதால் சாலை மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளான நிலை நிலவி வந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர்.
ஏலாக்கரை பகுதி மக்களின் சிரம்மங்களை அவ்வப்போது தினசரி நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு உள்ளனர். சில அரசியல் கட்சிகளும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை கோரி நோட்டீஸ்களும் ஒட்டிஇருந்தனர்.அதைதொடர்ந்து பொதுமக்கள் மக்கள் திரள் விண்ணப்பம் அளித்தனர்.
தற்போது கொல்லங்கோடு நகராட்சி 2024-2025 ஆம் நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து பாணந்தோப்பு குளம் தூர்வாரி சுற்றுச் சுவர் கட்டும் பணியும் ஏலாக்கரை பாணந்தோப்பு சாலையை உயர்த்தி சாலை அமைக்கும் பணியும் துவங்கி மூன்று மாதங்களான நிலையில் பணிகள் தொடர்ந்து செய்யாமல் ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.இதனால் குடியிருப்புவாசிகள் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் சாலையில் நடந்து செல்ல இயலாமலும் குடியிருப்பு வாசிகள் தங்களது வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வர முடியாமலும் முதியவர்களை அழைத்து செல்ல ஆட்டோ கூட வர முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சாலைப் பணிகள் நடைபெறாமல் இருப்பதை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு குடியிருப்பு வாசிகள் கொண்டு சென்றும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக ஏலாக்கரை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆதலால் ஏலாக்கரை ஊர் மக்கள் ஏலாக்கரை பாணந்தோப்பு சாலை பணியினை உடனடியாக முடிக்கவும் பாணந்தோப்பு குளத்தின் பணியினை முடித்து கழிவுநீர் பாணந்தோப்பு குளத்தில் தேங்காமல் மழை நீர் தேக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.