
கோவையில் 1003 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை! தமிழக முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்று உண்மையான நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளிலும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் வீடுகளிலும் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
கோவையில் இயங்கும் கல்லூரிகளில் கோவை மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயில்கின்றனர். அப்படி வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ள மாணவர்கள், பலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.
கடந்த சில காலமாக மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மோதிக்குள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும் வெவ்வேறு குற்றங்கள் செய்வோர்க்கு மானவர்கள் தாங்கள் தங்கியுள்ள அறைகளில் அடைக்கலம் தருவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனைத் தடுக்க, கோவை மாநகர போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரின் உத்தரவின்படி, துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் செல்வபுரம் ஐ.யூ.டி.பி காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் 1003 வீடுகளில் சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக, ஐ.டி ஊழியர் ஷேக் இப்ராஹிம் (வயது33), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுதாகரன் (வயது 64) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனையில் போதைப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
சோதனை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாநகரில் ரவுடிசம், போதைப்பொருள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க திடீர் சோதனைகள் நடத்தப்படும். இதுபோன்ற சோதனையால், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது,” என்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களைச் செய்வோரைத் தேடிப்பிடிக்காமல், பொதுமக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து போலீசார் இதுபோன்ற திடீர் சோதனைகளை நடத்தியது வரவேற்பை கொடுத்தாலும் ஒரு புறம் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது உண்மை. ஆனால் இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் ரகசியமாக ஒரே நாளில் உண்மையாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்களும் இன்றைக்கு போதைக்கு அடிமையாய் போன தமிழகத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்களா?
என்ற கோரிக்கையும் இது போன்ற விழிப்புணர்வு மட்டும் இல்லாமல் உண்மையான நடவடிக்கை எடுத்தால் ஏராளமான குடும்பமும் இளைஞர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்று ஒரு ஆதங்கத்தில் பொதுமக்கள் வெளியே சொல்ல முடியாத மன நிலையில் இருக்கிறார்கள் என்பது தான் அரசுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமையாகும்.