
ஏழை எளியவர்களின் பிரச்சினைகளை தீர்க்கசட்ட உதவிமையம் உள்ளது : நீதிபதி ராம்கிஷோர் பேச்சு.
வாடிப்பட்டி, பிப்.5-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணி குழு சார்பாக 76வதுகுடியரசு தின விழாவில், கல்லணை கிராம சபை கூட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பற்றி விளக்கி கூறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பற்றாளர் சிவசக்தி, வேளாண்மை துறை திவ்யபாரதி, அங்கன்வாடி பணியாளர் மலர் செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், வட்ட சட்டபணி குழு தலைவர் நீதிபதி ராம்கிஷோர் கலந்து
கொண்டு, இலவச சட்ட உதவிகளின் பணிகள்பற்றி விளக்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் , ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள நீதிமன்றங்களில் வட்ட சட்ட பணி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களின் வழக்குகளை அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இலவசமாக தீர்ப்பது முக்கிய கடமையாகும்.
அதற்கு உரிய மனுக்களை நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்ட உதவி மையத்தில் நேரடியாக கொடுக்கலாம்.
அப்படி கொடுக்கப்பட்ட மனுக்களில் விசாரணை செய்துதற்போது ஏராளமான பிரச்சனைகள் சமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய சூழ்நிலையில் கல்வி அவசியமான ஒன்றாகி விட்டது அதனால் உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை கட்டாயம் கல்வி கற்க வைக்க வேண்டும்.
ஒழுக்கம் தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனி திறமை உள்ளது அந்த திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளியில் பயிலும் 18 வயதுக்கு குறைவான மாணவர்களிடம் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லஅனுமதிக்க கூடாது.
அதில் ஏற்படும் விளைவுகளுக்கு பெற்றோர் தான் பொறுப்பாவார்கள். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஊராட்சி செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.
அதேபோல் வட்ட சட்ட பணி குழு வழக்கறிஞர்கள் செல்வகுமார் வடுகபட்டியிலும், ராதாகிருஷ்ணன் குட்லாடம்பட்டியிலும், விஜயகுமார் வாவிடமருதூரிலும், சடை முனி சிறுவாலையிலும், அரிச்சந்திரன் முடுவார்பட்டியிலும், சட்ட தன்னார்வலர் பொன் பனகல் பொன்னையா தெ. மேட்டுப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி விளக்கி பேசினர்.






