April 25, 2026
ரெட்டியார்சத்திரம் அருகே பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தரமற்ற தார்ச்சாலை : ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்க வேண்டாம் என சமூக ஆர்வலர் கோரிக்கை.

ரெட்டியார்சத்திரம் அருகே பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தரமற்ற தார்ச்சாலை : ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்க வேண்டாம் என சமூக ஆர்வலர் கோரிக்கை.

திண்டுக்கல், ஏப். 25:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தரமற்ற தார்ச்சாலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புகாரின் பின்னணி:
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பன்றிமலை ஊராட்சியில் உள்ள சோலைக்காடு பிரிவு முதல் நேருமலை வழியாக பில்லாவலி வரை உள்ள மலைப்பாதையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தப் பணிகள் மிக அவசரமாகவும், அதே சமயம் தரம் குறைந்த முறையிலும் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு:
இது குறித்து தாண்டிக்குடி சமூக ஆர்வலர் கணேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்டுள்ள இந்தச் சாலை, தார் மற்றும் ஜல்லிக் கலவை இன்றி மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறது. மலைப்பகுதி என்பதால் இத்தகைய தரமற்ற சாலைகளால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளது.

தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இன்றி ஒப்பந்ததாரர்கள் இந்தச் சாலையை அமைத்துள்ளனர். இது தொடர்பாக நான் நேரில் ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களைச் சேகரித்துள்ளேன்.


முக்கிய கோரிக்கைகள்:

    அரசு அதிகாரிகள் உடனடியாக இந்தச் சாலையை நேரில் ஆய்வு செய்து, சாலை மாதிரிகளை (Samples) ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

    சாலையின் தரம் உறுதி செய்யப்படும் வரை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய பில் தொகையை (Bill Payment) அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.

    தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதைக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை விதிமுறைகளை மீறி பணம் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் அந்தப் பணத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும்.

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தச் சாலையைத் தரமான முறையில் மீண்டும் அமைத்துக் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *