
ராஜ வாய்க்கால் பகுதியில் சட்ட விரோத குழாய்கள் அகற்றம் தண்ணீர் திருடுவதற்காக குழாய் பதித்தது அம்பலம்!
தண்ணீர் திருடுவதற்காக குழாய் பதித்தது அம்பலம்!
மடத்துக்குளம் : நவம்பர்,21
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கடத்தூர் ராஜ வாய்க்காலில் சட்டவிரோதமாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை மடத்துக்குளம் உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ராஜ வாய்க்காலில் பாசனத்திற்காக நீர் வரத்து இருந்ததால், ஆய்வு செய்யும் பணியை 21ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
தொடர்ந்து 21ஆம் தேதி அப்பகுதியில் தண்ணீர் நிறுத்தம் செய்த பின்னர், குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து கணியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ராஜ வாய்க்காலில் நீருக்கு அடியில் சட்ட விரோதமாக பதிக்கப்பட்டு இருந்த குழாய்கள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.






