
மதுரை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..
திமுக அரசின் மீது ஆர்.பி. உதயகுமார் சரமாரி குற்றச்சாட்டுகள் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 9 பேர் கொண்ட புதிய பூத் கமிட்டி கிளை கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தை ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் மற்றும் கருப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி அப்துல் சமது, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, மகளிரணி இணைச் செயலாளர் சாந்தி, வழக்கறிஞர் காசி. பேட்டை மாரி, கேபிள் மணி, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணைச்செயலாளர் ஆர்.பி குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மின்சார கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது.
கரூர் பிரச்சார பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் 41 உயிர்கள் பறிபோன வரலாறு இதற்கு முன் கிடையாது. இதைப்பற்றிப் பேசினால் ‘பவர்கட்’ ஆகிறது.
எதிர்க்கட்சிக்கு வருபவர்கள் தமிழர்கள் இல்லையா? பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை அமைத்து மக்களுக்கு என்ன நடந்தது எனத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் மற்றும் நடிகர் விஜய் பேசும்போது கூட்டத்திற்கு ஆம்புலன்ஸ் வரும், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினால் ஆம்புலன்ஸ் வருவதில்லை. பரப்புரையின் போது கரண்டைக் கட் செய்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் 64 பேர், மரக்காணத்தில் 21 பேர், சென்னையில் பாதுகாப்பு துறை விழாவில் 5 பேர் உயிரிழந்த சம்பவங்களிலிருந்து இந்த அரசு பாடம் கற்றிருக்க வேண்டாமா? காவல்துறை பாதுகாப்பை நம்பிதானே மக்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள்? பொதுக்கூட்டத்திற்கு வந்தால் இறந்து போகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.
இறுதியாக, “வலைதளங்களில் அவதூறு பரப்பாதீர்கள் என்கிறார் முதலமைச்சர். இந்த நாட்டில் கருத்து செல்லக் கூடாது என்றால் இது ஜனநாயக நாடு தானா?” என்று கேள்வி எழுப்பி தனது பேச்சை நிறைவு செய்தார்.
இவ்வாறு, திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.






