
மதுரை அருகே முதலாம் இராசராசனின் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் மேல உரப்பனூர் கிராமத்தில் பழங்கால எழுத்துக்கள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் கொடுத்த தகவலின்படி தென்னகப் பண்பாட்டு ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்களும், நாசியா கல்லூரி உதவி பேராசிரியர்களுமான கோபி மற்றும் மாரீஸ்வரன் போன்றோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு காணப்பட்ட கல்வெட்டானது முதலாம் இராசராசனின் வட்டெழுத்து கல்வெட்டு என்பது தெரியவந்தது.
கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது : இராசராசனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு: மேல உரப்பனூர் கண்மாய் கலிங்கில் இக்கல்வெட்டானது காணப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு தொல்லியல் துறையால் இங்கு முதலாம் இராசராசசோழனின் மெய்க்கிருத்திகள் அடங்கிய துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது முதலாம் இராசராசசோழனின் மெய்க்கீர்த்தியின் தொடக்கப்பகுதியும் அக்கல்வெட்டின் முடிவுப்பகுதியும் என இரு கல்வெட்டுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இங்கு காணப்படும் முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு வரிகள் கீழ் வருமாறு, “ஸ்ரீ திருமகள் போல” என தொடங்கி அவர் வெற்றி கொண்ட பகுதிகளை குறிப்பிடும் வகையில் மனக்கொள காந்(தளூர் சாலை), குடமலை நாடு என்ற வாசகங்கள் இடம் பெறுகின்றன. மேலும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி இடம்பெறக்கூடிய கல்வெட்டில் “பெருந்தசனெழுத்து மென்பது அகநாழிகையர் பழி” என்று இரு வரிகள் இடம்பெறுகின்றன.
இக்கல்வெட்டின் படி பெருந்தசன் என்பவர் கருவறைக்கு பொறுப்பு என்று மட்டும் பொருள் அறியப்படுவதால் இங்கு ஒரு கோவில் கருவறையுடன் கட்டப்பட்டு வழிபாட்டில் இருந்தது தெளிவாகிறது. இக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட கலிங்கிற்கு அருகே 300 மீட்டர் தொலைவில் கண்மாய் நடுவே ஒரு கற்கிணறு காணப்படுகிறது. இக்கிணற்றின் பக்கவாட்டு சுவரில் மீன்களின் உருவம் புடைப்புச் சிற்பமாக பொறித்துள்ளனர்.
கிணற்றுச்சுவரில் ஒரு நடுகல் ஒன்றும் காணப்படுகிறது அவற்றில் 5 மனித உருவங்களும், ஆயுதம் ஏந்திய படியும், வேட்டை நாயுடன் நின்ற கோலத்தில் இடம்பெறும்படி செதுக்கியுள்ளனர். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது உரப்பனூர் கிராமமானது ஆயிரம் வருடத்திற்கு முன்பு பாண்டியர் காலம் தொட்டு சோழர்கள், பிற்கால ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத ஆட்சிப்பகுதியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது என்று என்று அவர்கள் கூறினர்.






