
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: ரவுடி கலைச்செல்வனுக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி மாவட்டம், சிவகிரி.
தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கலைச்செல்வன் மீது, தற்போது குண்டர் தடுப்பு சட்டம் (Goondas Act) பாய்ந்துள்ளது.
கடந்த மாதம் தேவிபட்டினம் பகுதியில், போலீசார் போதைப் பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, தேவிபட்டினத்தைச் சேர்ந்த வேல்சாமியின் மகன் கலைச்செல்வன் என்பவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட கஞ்சா பொருளை லாப நோக்கில் விற்பனை செய்து, இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், அவர் மீதான குற்றச் செயல்கள் சமூகத்திற்கு மிகுந்த அபாயமாக இருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கலைச்செல்வன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் பரிமாணத்தையும், சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S.அரவிந்த் பரிந்துரை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டார்.
அதன்படி, சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், கலைச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்த்துப், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கை, போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து கண்காணிப்பையும், கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.






