
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
சுசீந்திரம் ஏப்ரல் 15
கிறிஸ்தவ பெருமக்களின் துக்க நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளியன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்தவ பெருமக்களின் துக்க தினமாக வருகிற வெள்ளிக்கிழமை (18.04.2025) அன்று அனுசரிக்கப் படுகிறது. இயேசு கிறிஸ்து இறந்த நாளை தான் புனித வெள்ளியாக கிறிஸ்தவ மக்கள் அனுசரித்து, அன்றைய தினம் ஆலயங்களில் பகல் நேரம் முழுவதும் வழிபாடு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அந்நாளில் தமிழகத்தில் அதுவும் தென் மாவட்டங்களில் கடலோரங்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இலட்ச கணக்கில் சிறுபான்மை இன கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர்.
ஏற்கனவே வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, மிலாடிநபி போன்ற புனித நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அதே போன்று கிறிஸ்தவ பெருமக்களின் மத நம்பிக்கையையும், மன அமைதியையும் உறுதிபடுத்திடும் வகையில் புனித வெள்ளியன்று தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்திட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.