
கோரிக்கைகளை வலியுறுத்தி பழனியில் கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சல் துறை ஊழியர்கள் பணி!
பழனி, ஜூலை 21:
அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் கவனிப்பு ஈர்ப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 20) முதல் வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் விளைவாக, பழனி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் இன்று காலை முதலே கோரிக்கை வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜை உடையில் அணிந்து பணிக்கு வருகை தந்தனர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் மற்றும் சேமிப்பு வங்கி சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், கவன ஈர்ப்பு போராட்டமாக கருப்பு பேட்ஜ் அணிந்தவாறே தங்களது அன்றாடப் பணிகளை ஊழியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.






