
பழனி முருகன் கோவிலில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் வழிபாடு!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நல்லுசாமி தலைமையில் திரண்ட கட்சியினர், முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் கோவிலில் சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் நலம் பெறவும், தமிழக முதல்வரின் அரசியல் பயணம் சிறக்கவும் வேண்டி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிகழ்வில் ஒட்டன்சத்திரம், பழனி வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.






