
பழனி கிரிவலப் பாதையில் ‘பொருள்காட்சி’யாக மாறிய சிசிடிவி கேமராக்கள்: சீரமைக்க பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அவசர கோரிக்கை!
பழனி: மே : 19
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பொதுமக்களும் வருகை தருகின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காகக் கிரிவலப் பாதை மற்றும் தேரோடும் வீதிகளில் பழனி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், தற்பொழுது இந்த கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் முறையாகச் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகப் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முக்கியப் பகுதிகளில் செயலிழப்பு
குறிப்பாக, கிரிவலப் பாதையில் உள்ள வன துர்க்கை அம்மன் கோயில் பகுதி, ஸ்ரீ மகா குரு சாமி ஜீவசமாதி, பவர் ஆபீஸ் ஐயப்பன் கோயில் அருகில் மற்றும் மேற்கு ரத வீதி உள்ளிட்ட மிக முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எவையுமே தற்பொழுது பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி
“தமிழகத்திலேயே பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் முதன்மையான தேவஸ்தான நிர்வாகங்களில் ஒன்றாகப் பழனி தேவஸ்தானம் உள்ளது. அப்படி இருந்தும், பக்தர்களின் மிக முக்கியமான அடிப்படைப் பாதுகாப்பு அம்சமான கண்காணிப்பு கேமராக்களைப் பராமரிப்பதில் ஏன் இத்தனை அலட்சியம்?” எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆங்காங்கே பழுதடைந்து கிடக்கும் கேமராக்கள், பாதுகாப்பிற்கு உதவாமல் வெறும் ‘பொருள்காட்சி’ போலக் காட்சி அளிப்பதாகப் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிரிவலப் பாதையில் கேமராக்கள் முடங்கியிருப்பது, சமூக விரோதச் செயல்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களைக் கண்காணிப்பதில் பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளதுடன், இரவில் வலம் வரும் பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்களிடையே பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளுக்குக் கோரிக்கை
எனவே, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கிரிவலப் பாதை மற்றும் தேரோடும் வீதிகளில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள அனைத்துக் கண்காணிப்பு கேமராக்களையும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி செய்தியாளர் நா.ராஜாமணி – 8973350663






