
பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோவில் தனி நிர்வாகத்தை பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் இடும்பன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் மண்டல இணை ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இடும்பன் கோவிலின் கீழ் 14உபகோயில்கள் மற்றும் 60ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன.
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் குளத்தில் புனிதநீராடி இடும்பனை வழிபாடு செய்து பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இடும்பன் கோவிலானது பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் திண்டுக்கல் மண்டல இணை ஆணையரின் கீழ் தனி நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இடும்பன் கோவிலை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டுமென பழனி கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் இணைஆணையரும் தீர்மானம் நிறைவேற்றி இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இடும்பன் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பலநூறு ஆண்டுகளாக உள்ள இடும்பன் கோவிலை பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைக்க கூடாது என்றும், இதற்கு முயற்சி செய்யும் பழனி கோவில் இணை ஆணையரை கண்டிப்பதாவும், பழனி கோவில் நிர்வாகம் அத்துமீறல் குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாவும் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பரம்பரை அறங்காவலர் ராஜா மற்றும் அகில உலக முருக பக்தர்கள் பேரவை மாநில தலைவர் ஆடலூர் ராமமூர்த்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் நாச்சிமுத்து திருக்கோயில் முன்னாள் அறங்காவலர்கள் பொன்னுச்சாமி கிருஷ்ணமூர்த்தி சந்தானகிருஷ்ணன் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை கார்த்திக் வானதி வழக்கறிஞர் கலை எழில்வாணன் ஆசிரியர் மகுடீஸ்வரன் இளைஞர் காங்கிரஸ் பாலகுமார்,மற்றும் தேவேந்திரன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்,கார்த்தி அடையாளவேல், அறங்காவலர் அசோக், செல்வம், காமராஜ் மற்றும் பழனி நரிக்குறவர்கள் சங்க உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






