
மதுரை சோழவந்தான் அருகே கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நெல் மூட்டைகளை எடுத்துச் சென்றதால் விவசாயிகள் பாதிப்பு :
பல்லாயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து நாற்றாக மாறும் அவலம்:
முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் நெல் கொள்முதல் நிலைய அனுமதியை ரத்து செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை:
சோழவந்தான் : நவம்பர், 24
மதுரை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக , நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்லாததால் மழையில் நனைந்து முளைத்து நாற்றாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உரிய காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யாததாலும் மற்றும் ஆளுங்கட்சியினர் வியாபாரிகள் நெல்களை முதலில் அதிகாரிகள் மூலம் கொள்முதல் செய்து விட்டதால் தாமதமாக அறுவடை செய்த விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் தேங்கி கிடப்பதாக கூறுகின்றனர்.
குறிப்பாக, சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
இந்த மூட்டைகள் மழையில் நனைந்து அழுகும் நிலைக்கு சென்றுள்ளது சில மூட்டைகளில் நெல் பயிர்கள் நாற்றாக மாறி முளைத்தும் காணப்படுகிறது .
சில கொள்முதல் நிலையங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியும் காணப்படுகிறது.
இதனால், விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் குடையை பிடித்தவாறு தங்களின் நெல் மூட்டைகளை மழையில் நனையாதவாறு பாதுகாத்து வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
திமுகவினரின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கையால் அதாவது வியாபாரியின் நெல்களை கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைத்து அதிகாரிகள் மூலம் குடோன்களுக்கு அனுப்பியதால் தாமதமாக அறுவடை செய்த விவசாயிகளின் நெல்களை கொள்முதல் செய்ய முடியாமல் மாவட்ட நிர்வாகம் இருப்பதாக கூறுகின்றனர்.
ஆகையால், இந்த பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து முறைகேடாக வியாபாரிகள் நெல்களை கொள்முதல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு கொள்முதல் நிலையங்கள் வைக்க கொடுக்கும் அனுமதியை ரத்து செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






