
சர்வாதிகார ஆட்சி செய்வதில் திமுக அரசு உலக சாதனை.! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..
வாடிப்பட்டி, நவ:22.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக பேரூராட்சி பூத் கமிட்டிபாக
பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, சரவணன், தமிழரசன், பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ராஜ்குமார் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி பாக பொறுப்பாளர் களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கி பேசினார்., அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க கள்ள ஓட்டு போடுவதற்கு முடிவுரை எழுதுவதுதான் இந்த எஸ் ஐ ஆர் பணி. அதனால் தான் எஸ் ஐ ஆர் வரக்கூடாது என உச்சநீதிமன்றம் வரை திமுகவினர் செல்கின்றனர்.
எஸ்.ஐ.ஆர் படிவத்தை பார்த்தால் தலை சுற்றுவதாக ஸ்டாலினும், இந்தப் படிவம் மிக எளிமையாக உள்ளதாக கே என் நேருவும் கூறுகின்றனர். இவர்களுக்கு முரணாக திமுகவினரோ உங்களுக்கு உதவ நாங்கள் ரெடி, நீங்க ரெடியா? என தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், தமிழக மக்களுக்கு ஒரு லட்சம் பட்டா வழங்கப்போவதாக அறிவிக்கின்றனர். பட்டை நாமம் வேண்டுமானால் போடலாம், பட்டா கொடுக்க முடியுமா? என்பது தெரியவில்லை. ஆண்டுக்கு ஒரு லட்சம் பட்டா வழங்க முடியாது என்பது தெரியும்.
ஏற்கனவே, 525 வாக்குறுதிகளை கொடுத்து ஸ்டாலின் மக்களை ஏமாற்றினர். தற்போது இவ்வாறு கூறி ஏமாற்றுகின்றார்.அதற்காகவே மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.எதிர்க்கட்சியாக இருந்த போது தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்புகளை கொடுத்தனர்.
தற்போது, அரசு அறிவிப்பாக வாக்குறுதி கொடுத்து வருகின்றனர்.அது போல் தமிழக மக்களை வீதியில் நிற்க வைத்து விட்டு உங்களுடைய ஈகோவால் மத்திய அரசு மீது பழி போடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடி, வாக்குகளை சேகரிக்கும் வித்தைகளை பழகி உலக சாதனை படைத்துள்ளனரே தவிர, மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை.
மக்களை ஏமாற்றுவதில், பொய் சொல்லுவதில், சர்வாதிகார ஆட்சி செய்வதில், மன்னராட்சி செய்வதில், வாரிசு அரசியல் செய்வதில், குடும்ப அரசியலும், ஸ்டாலின் அரசு உலக சாதனை படைத்துள்ளது.
விரைவில் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலரும் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார்.






