
வேலை நியமண ஆணை: ஆட்சியர்:
சிவகங்கை.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், தேர்வான 372 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, வழங்கி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர்கலைக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், தேர்வான இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற
உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கிடும் வகையில், சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது கல்வி வளத்தை பொறுத்தே அமைகிறது என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தரமான கல்வியை தமிழகத்தில் வழங்கி வருவது மட்டுமன்றி, மாணாக்கர்களின் கல்வி தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினையும் பெற்று பயன்பெறும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு, அதன்படி, இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிடும் பொருட்டும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கல்வியின் அடிப்படையில் மாதந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி அறிவோடு சேர்த்து தொழில் பயிற்சியையும் வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
படித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படுவது என்பது சாத்தியமில்லை. இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல் தனியார் துறையிலும் சிறந்த வேலை வாய்ப்பினை பெற்றிடும் வகையில், தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இன்றையதினம் மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் காரைக்குடி, டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மொத்தம் 73 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முகாமிற்கு, மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,378 வேலைநாடுநர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து, நேர்முகதேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட 372 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணையினை வழங்கி, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் 106 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இம்முகாம்களின் மூலம் வேலை வாய்ப்பினை பெறுகின்றவர்கள், கூடுதலாக தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதற்கும் தங்களை தயார் படுத்திக் கொண்டு, அதன் மூலமும் சிறந்த வேலை வாய்ப்பினைப் பெற்று பயன்பெற வேண்டும்.
தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்து, அதில் சாதித்து காட்ட வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் வாயிலாக பயன்பெற்று வரும் பயனாளிகள் தங்களது வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அதனை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, அழகப்பா பல்கலைகழக கல்வி குழுமத்தலைவர் இராமநாத வைரவன் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு.மணிகணேஷ், காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.ஹேமமாலினி கணேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள், வேலை நாடுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






