
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்மொத்தம் ரூ.59.02 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளைதுவக்கி வைத்தார்..
சிவகங்கை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைப்பதற்கான பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தலைமையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், நல்லாட்சியில், கடந்த நான்கரை ஆண்டுகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சீரான வளர்ச்சியையும், சமூக நீதியையும், ஜனநாயகத்தையும் தனது குறிக்கோளாக கொண்டு மக்கள் பணியாற்றிய பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆக்கப்பூர்வமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக கல்வி, தொழில், வேளாண், வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்கி, பிற மாநிலங்கள் மட்டுமன்றி, பிற நாடுகளுக்கும் அத்திட்டங்கள் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
மேலும், பொருளாதார வல்லுநர்களின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கி வருகிறது.
அதுமட்டுமின்றி பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவைகளை போற்றி பாதுகாத்திடும் அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு சிறந்து விளங்கி வருகிறது.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்திடும் வகையில், நகரங்களுக்கு இணையாக அனைத்து அடிப்படை வசதிகளையும் கிராமப் புறங்களில் மேம்படுத்திடும் பொருட்டு, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகள் அறிந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே, பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்டம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
டாக்டர் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 இலட்சத்திலிருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.03.00 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்றையதினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி ஊராட்சி மட்டாங்காடு கிராமப் பகுதியில் ரூபாய் 9.67 இலட்சம் மதிப்பீட்டில் புழுதிபட்டி – பொன்னமராவதி சாலை முதல் மட்டாங்காடு சாலை வரையும், கிழவயல் ஊராட்சி கிழவயல் கிராமப் பகுதியில் ரூபாய் 49.35 இலட்சம் மதிப்பீட்டில் புழுதிபட்டி – பொன்னமராவதி சாலை முதல் சங்கிலிகருப்பு சாலை வரையும் மொத்தம் ரூபாய் 59.02 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராகிய எனது சார்பில் மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக மேற்கண்ட பணிகள் மட்டுமன்றி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 121 ஊராட்சிகளிலுள்ள 700-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மற்றும் 6 பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, எனது சொந்த நிதியின் கீழும் கடந்த நான்கரை ஆண்டுகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் கூடுதல் தேவைகள் இருப்பின், அக்கோரிக்கைகள் மீது அரசின் திட்டங்கள் வாயிலாகவோ அல்லது எனது சொந்த நிதியின் வாயிலாகவோ உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பிரேமராஜன், எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






