
எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவியிடம் பொதுமக்கள் குமுறல் !
விருதுநகர்:
விருதுநகர், ராஜபாளையம் நகராட்சி 3 வது வார்டு பகுதியில் பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை பார்வையிட சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோரை பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் துப்புரவு பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த வார்டு நகர்மன்ற திமுக உறுப்பினர் சுரேஷ் முறையாக மேம்பாட்டு பணிகள் செய்யவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் மாஸ் கிளீனிங் என்ற பெயரில் துப்புரவு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துப்புரவு பணியாளர்கள் கையுறை உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு கவசம் அணியாமல் கழிவு நீர் வடிகால் பணிகளை சுத்தம் செய்து வந்தனர்.
இது குறித்து, பொதுமக்கள் சுகாதார ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
அப்போது, துப்புரவு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கடந்த நான்கரை வருடங்களாக தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் வடிகால், ஓடை மேம்பாலம் உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என நான்கு வருடங்களாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் தற்போது தேர்தல் நெருங்குவதால் மட்டுமே பணிகள் செய்யப்படுகிறது என திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எம் எல்.ஏ. வசிக்கும் செட்டியார்பட்டியில் இருக்கும் சுத்தம் தங்கள் பகுதியில் இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இதனால் அவர்களை சமாளிக்க முடியாமல் மக்கள் பிரதிநிதிகள் திணறினர். பின்னர், செய்தியாளர்கள் படம் பிடித்த போது சட்டமன்ற உறுப்பினர் அங்கு இருந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்றார்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.






